search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கத்துறை அதிகாரிகள் கைது"

    திருச்சி விமானநிலையத்தில் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து 6 சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். #TrichyAirport #CBIRaid
    திருச்சி:

    திருச்சி விமானநிலையத்தில் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 6 சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், கணக்கில் வராத ரூ.9 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருச்சி விமானநிலையம் சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ளது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, துபாய், குவைத் உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி விமானநிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக கடத்தல் தங்கம் பிடிபடுவது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் மாலை திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானார்கள்.

    அப்போது விமானநிலையத்தின் வெளிப்புற பகுதியில் காத்திருந்த மதுரை சி.பி.ஐ. பிரிவு டி.எஸ்.பி. மதுசூதனன் தலைமையிலான 11 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் மாலை 5.30 மணி அளவில் அதிரடியாக விமானநிலையத்துக்குள் புகுந்தனர். அங்கு சோதனை முடித்து வெளியே வந்த பயணிகளை தடுத்து நிறுத்தி மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர். அவர்களிடம் தீவிர சோதனை நடத்தினார்கள். பயணிகள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. 70 பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பயணிகள் வருகை பகுதி, லக்கேஜ்களை ஸ்கேனர் செய்யும் பகுதி, சுங்க அதிகாரிகள் அலுவலகம் என அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பயணிகளை தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். இதில் பயணிகள் சிலர் ‘குருவி’களாக (மற்றவர்களுக்காக பொருட்களை கடத்தி வருபவர்கள்) வந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் சிங்கப்பூரில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி வந்து, வியாபாரிகளிடம் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. அவ்வாறு ‘குருவி’கள் போல் வந்த பயணிகளுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்தனர். இந்த விசாரணையில், பயணிகள் தங்கம் கடத்தி வருவதில் சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    2-வது நாளாக நேற்றும் சோதனையும், விசாரணையும் நீடித்தது.

    இது தொடர்பாக திருச்சி விமானநிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசுலு, கண்காணிப்பாளர்கள் கலுகசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், அதிகாரி பிரடி எட்வர்டு மற்றும் பயணிகள் புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ், திருச்சியை சேர்ந்த தமயந்தி, அவரது கணவர் தீவகுமார், மனோகரன் முத்துகுமார் என்கிற சரவணன், அப்துல்ரமீஸ், கனகா, சாந்தி, ராமலெட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா, இலங்கையைச் சேர்ந்த மகேஷ்வரன், சுரேஷ் ஆகிய 19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் திருச்சியில் இருந்து மதுரைக்கு அழைத்துச்சென்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், விமானநிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 4 ஆயிரம் இருந்தது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருபிரிவினர் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளின் வீடுகளுக்கும் சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அதிகாரிகளின் வீடுகளில் எவ்வளவு தங்கம் பிடிபட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் சில பயணிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தது தெரியவந்தது. அந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்கள் கடந்த 3 மாதங்களில் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு அவர்கள் வெளிநாட்டுக்கு சென்று வந்த தினத்தில் திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கி உள்ளதா?. அது தொடர்பாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் தங்கம் கடத்தி வரும்போது, விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.



    அப்படி சோதனை நடத்தும்போது, குறிப்பிட்ட சில அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். அவ்வாறு அலட்சியமாக இருந்து தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பற்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு இன்பார்மர் மூலமாக ரகசிய தகவல்கள் சென்றதாகவும், அதன் அடிப்படையிலேயே திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமானநிலையத்தில் இதேபோல் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது தங்கம் கடத்தி வரும் பயணிகளிடம் அலட்சியமாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மீண்டும் திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TrichyAirport #CBIRaid 
    திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #TrichyAirport #CBIRaid
    திருச்சி:

    வெளிநாடுகளில் இருந்து தொடர்ச்சியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று விமான நிலையத்திற்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

    மதுரையில் இருந்து வந்திருந்த துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.



    சுங்கத் துறை அதிகாரிகள், விமான நிலைய பணியாளர்கள், அங்கு செயல்படும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அனைவரின் பொருட்கள், ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டன.

    இரண்டாவது நாளாக இன்றும் சிபிஐ சோதனை நீடித்தது. பயணிகள், விமான நிலைய பணியாளர்கள், வியாபாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் என 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் சுங்கத்துறையின் உதவி ஆணையர் மற்றும் 2 கண்காணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விசாரிக்கப்பட்ட பயணிகளில் பெரும்பாலானோர் வியாபாரிகள் ஆவர். தொழில் சம்பந்தமாக அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வரக் கூடியவர்கள். அவர்கள் அதிக அளவு தங்கம் கொண்டு வந்ததாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த அதிரடி விசாரணையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உதவி செய்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். #TrichyAirport #CBIRaid

    ×